ரயில்வேயில் 22,195 காலி பணியிடங்கள்.. இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 கடைசி தேதி!
மத்திய அரசின் ரயில்வே துறையில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பச் செயல்முறை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 22,195 குரூப்-டி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 2-ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இத்தேர்வுக்கான பிரத்யேக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள தகவல்கள்:
தேர்வர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுக்குத் தேவையான முக்கியமான பாடக்குறிப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அனுபவம் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் மத்திய அரசுப் பணிகளில் அதிகளவில் சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த இலவசப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
