ஆண்களுக்கு மட்டுமே... 225 ஆடுகள் பலியிட்டு பிரம்மாண்ட கறிவிருந்து !
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிகோடி பகுதியில் கரும்பாறை முத்தையா கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கறிவிருந்து திருவிழா மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற பாரம்பரியக் கட்டுப்பாடு பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படுகிறது. பெண்கள் யாருக்கும் இந்தத் திருவிழா மற்றும் கறிவிருந்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனாக 225 கிடா ஆடுகளைக் கோவிலுக்கு வழங்கினர். சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு 225 ஆடுகளும் பலியிடப்பட்டுப் பிரம்மாண்டமாகச் சமைக்கப்பட்டன. சுமார் 2,000 கிலோ அரிசி சாதமும், ஆட்டுக் கறிக் குழம்பும் தயார் செய்யப்பட்டுப் பிரசாதமாக வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒரே இடத்தில் திரண்டு உணவருந்தினர்.

திருவிழா முடிந்த பின்னர் எஞ்சிய உணவுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கேயே உண்டு முடிப்பது மட்டுமே இக்கோவிலின் முக்கிய பாரம்பரிய நடைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். 225 ஆடுகள் பலியிடப்பட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விசித்திரமான கோவில் திருவிழா அப்பகுதியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
