இந்தோனேசியாவில் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த கப்பல் - 225 பேர் மீட்பு; 41 பேர் மாயம்... 5 பேர் உயிரிழப்பு!
ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நடுவழியில் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் சுரபயா நகரில் இருந்து, தெற்கு சுலவசி மாகாணத்தின் மகசர் நகரை நோக்கி 271 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. வடகிழக்கு ஜாவாவின் மடூரா தீவு அருகே படகு சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் படகில் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
படகு முழுவதும் தீ பரவியதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பலரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கடலில் குதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், கடலில் தவித்தவர்கள் மற்றும் படகில் சிக்கியவர்கள் என மொத்தம் 225 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
இந்த சோக சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், கடலில் மூழ்கி மாயமான 41 பேரைக் கண்டறியும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். படகில் தீப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது குறித்து உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
