நாளை நீட் மறுதேர்வு - தமிழகத்தில் 1.42 லட்சம் உட்பட 22.79 லட்சம் மாணவர்கள் எழுதத் தயார்!

 
நீட் தேர்வு

வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட, மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் இந்த மெகா மறுதேர்வை நாடு முழுவதும் உள்ள 22.79 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற அசல் தேர்வில் முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை தீவிரமடைந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள மறுதேர்வுக்கான மாநில வாரியான மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்:

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் நாளை இந்த மறுதேர்வை எதிர்கொள்கின்றனர். இதற்காகத் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் பிரத்யேகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மறுதேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேச மாநிலம் நாடு முழுவதிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நீட்

மீண்டும் ஒருமுறை வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசும் தேசியத் தேர்வு முகமையும் மிகத் தீவிரமாக உள்ளன. இதற்காக வரலாறு காணாத அசுர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு வினாத்தாள்கள் மற்றும் முக்கியத் தேர்வு ஆவணங்கள் அனைத்தும் இந்தியப் விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்.) சிறப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாகப் பாதுகாப்பாகத் தூக்கிச் செல்லப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் உள்ள ரகசியக் காப்பகங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் பரிமாற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி முழுவதற்கும் மத்தியத் துணை ராணுவ வீரர்களின் (பாராமிலிட்டரி ஃபோர்ஸ்) துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் டெல்லியில் உள்ள மத்தியக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன. மேலும், இம்முறை வினாத்தாள் தயாரிப்பு மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள் குழுவினர் அனைவரும் தேர்வு முடியும் வரை வெளி உலகத் தொடர்பின்றி முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் (ஐசோலேஷன்).

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

நாளை மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) ஆஃப்லைன் முறையில் இத்தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் காலை 11:00 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மதியம் 1:30 மணிக்குக் கேட்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும். அதற்குப் பிறகு வரும் மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை.

தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் அதிநவீன மெட்டல் டிடெக்டர் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கைக்கடிகாரங்கள், மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் கோடை வெயில் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், விசிறி வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை உறுதி செய்ய என்.டி.ஏ. உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் வெளிப்படையான குடிநீர் பாட்டில்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

மறுதேர்வை ஒட்டி நாடு முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கண்காணிப்புக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகளைத் தடுக்க நாடு முழுவதும் தற்காலிகமாகத் டெலிகிராம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தகவல் தொடர்புச் செயலிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.