6 மாதங்களில் 23 பேருக்குத் தூக்குத் தண்டனை... அதிரடி காட்டிய நீதிபதி திடீர் இடமாற்றம்!

 
தூக்குத்தண்டனை நீதிபதி

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் பணியாற்றி, 6 மாதங்களில் 23 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து நாடு முழுவதும் கவனத்தைப் பெற்ற நீதிபதி ரவிக்குமார் திவாகர் திடீரென குடும்ப நல நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றிய ரவிக்குமார் திவாகர், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் மட்டும் 11 வெவ்வேறு வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இவரது அதிரடித் தீர்ப்புகள் சட்ட மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளானது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதனிடையே, நீதிபதி ரவிக்குமார் திவாகரின் விரைவு நீதிமன்றத்தில் பாதியளவு விசாரிக்கப்பட்டு வந்த கொலை வழக்குகள் உட்பட 97 முக்கிய வழக்குகள், கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்ட முதன்மை நீதிபதியின் நிர்வாக உத்தரவு மூலம் திடீரென வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இதற்குச் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கு ஒன்றின் தீர்ப்பில் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த நீதிபதி ரவிக்குமார், "சட்டம் வகுத்த நடைமுறைகளை மீறி நிர்வாக உத்தரவு மூலம் வழக்குகளை எப்படி மாற்ற முடியும்?" எனக் கேள்வி எழுப்பியதோடு, நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும் கவலை தெரிவித்திருந்தார். மாவட்ட நீதிபதியுடனான இந்த அதிகார மோதல் போக்கு தீவிரமடைந்த நிலைகயில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

அதன்படி, நீதிபதி ரவிக்குமார் திவாகர் முசாபர்நகர் குடும்ப நல நீதிமன்றத்தின் கூடுதல் முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக  சிவகுமாரி என்பவர் விரைவு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் திடீர் இடமாற்றம் உத்தரப் பிரதேச நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.