இலங்கை சிறையிலிருந்து 25 மீனவர்கள் விடுதலை - லாட்டரி மார்ட்டின் மகன் நடவடிக்கை... பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி நெகிழ்ச்சி!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 25 பேர், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழகப் பகுதிகளிலிருந்து கடலுக்குச் சென்ற 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலையை அறிந்த லோக் ஜனசக்தி கட்சியின் மாநிலத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், உடனடியாகக் காரைக்கால் பகுதிக்கு நேரில் சென்று மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தவித்துக் கொண்டிருந்த 25 மீனவ குடும்பங்களுக்கும் தலா ரூ. 10,000 ரொக்க உதவி வழங்கினார்.
பண உதவி மட்டுமின்றி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான ஒரு மாத கால மளிகைப் பொருட்களையும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணையாக நின்றார்.

மீனவர்களை மீட்பதற்காக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மூலம் முறையான சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்தார் ஜோஸ் சார்லஸ் மார்டின். இடைவிடாத முயற்சிகளின் பலனாக, தற்போது 25 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அரசியல் கடந்து மீனவர்களின் துயரைக் கண்டு களமிறங்கிய எல்.ஜே.கே தலைவரின் இந்தச் செயல், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மீனவ கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
