வலையில் சிக்கிய 25 கிலோ ‘கச்சிடி’ மீன் - ரூ.2 லட்சத்திற்கு ஏலம்!

 
கச்சிடி மீன்

ஆந்திர மாநிலம் அந்தர்வேதி கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், மருத்துவக் குணங்கள் நிறைந்த 25 கிலோ எடை கொண்ட அரிய வகை 'கச்சிடி' மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்த அரிய வகை மீனைப் பார்ப்பதற்காகத் துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தர்வேதி மீன்பிடித் துறைமுகத்திற்கு மீனவர்கள் கொண்டு வந்த இந்த 25 கிலோ கச்சிடி மீனைப் பார்த்த வியாபாரிகள், அதனைப் போட்டிப் போட்டுக் கொண்டு ஏலம் கேட்கத் தொடங்கினர். இறுதியாக, பாலக்கொல்லு பகுதியைச் சேர்ந்த பிரபல மீன் வியாபாரி ஒருவர், இந்த ஒற்றை மீனைப் பலத்த போட்டிக்கு இடையே ரூ.2 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துச் சென்றார். சாதாரணமாகக் கிடைக்கும் மீன்களை விட, இந்த மீனுக்கு இருக்கும் தனித்துவமான தேவையே இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனதற்குக் காரணமாகும்.

கச்சிடி மீன்கள் கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகை மீன் இனமாகும். இந்த மீனின் உடற்பகுதியை விட, அதன் வயிற்றில் இருக்கும் 'நெட்டி' எனப்படும் காற்றுப் பை மிக அதிக மருத்துவக் குணங்கள் கொண்டது.

 இந்த மீனின் காற்றுப் பைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையின் போது மனித உடலின் உள்ளுறுப்புகளைத் தைப்பதற்கான பிரத்யேகக் கரையும் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கிய மருந்துப் பொருட்கள் மற்றும் மாத்திரைகளின் உறைகள்  தயாரிக்கவும் இது உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே, சீன மற்றும் ஜப்பானிய சர்வதேச மருத்துவச் சந்தைகளில் இந்த கச்சிடி மீன்களுக்கு எப்போதும் கோடிக்கணக்கில் மவுசு உள்ளது. ஒரே மீனில் லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்ததால், சம்பந்தப்பட்ட அந்தர்வேதி மீனவக் குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.