விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான கொடூரம் - தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

 
விருதுநகர் பட்டாசு சிவகாசி வெடிவிபத்து விருதுநகர் பட்டாசு சிவகாசி வெடிவிபத்து

தமிழகத்தின் பட்டாசுத் தலைநகரான விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசுத் தொழிற்சாலையில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நிகழ்ந்த கோர வெடிவிபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25 தொழிலாளர்கள் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த சமயத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்குப் பணியில் இருந்துள்ளனர். ரசாயனங்களைக் கலக்கும் போது ஏற்பட்ட உராய்வினால் இந்த விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து

ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள் அரங்கேறி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இதே மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தத் தொடர் மரணங்கள் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதைக் கடுமையாகக் கருதிய மனித உரிமை ஆணையம், விபத்து குறித்து 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு (SP) அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட்டாசு ஆலை வெடி

ஆணையம் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் நிலை, வழக்கின் தற்போதைய புலனாய்வு முன்னேற்றம் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்புத் தணிக்கை சரியாக நடத்தப்பட்டதா என்பதையும் ஆணையம் ஆராய உள்ளது. தொழிலாளர்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.