25 சிக்ஸர், 13 பவுண்டரி... 233 ரன்கள் - போட்டியில் புயலாக மாறிய அபிஷேக் சர்மா!

 
அபிஷேக் சர்மா

சர்வதேச டி20 போட்டிகளில் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த இந்திய இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, பஞ்சாப் மாநில உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி வெறும் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார்.

பஞ்சாப் மாநில மாவட்டங்களுக்கு இடையேயான சீனியர் கிரிக்கெட் தொடரில், தார்ன் தரன் அணிக்கு எதிராக அமிர்தசரஸ் அணிக்காகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா, எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். 25 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் வெறும் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 533 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. அபிஷேக் சர்மாவின் இந்த அசுரத்தனமான இன்னிங்ஸின் ஸ்கோர்கார்டு மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

அபிஷேக் சர்மா

உள்நாட்டுப் போட்டியில் மாஸ் காட்டியுள்ள போதிலும், சமீபகாலமாகச் சர்வதேச டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மா பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்: ஜிம்பாப்வே தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 11 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் 131 ரன்கள் (சராசரி 26.2), அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளில் 49 ரன்கள் (சராசரி 24.5) மட்டுமே எடுத்துள்ளார். கடைசி 10 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக 37.05 ஆக இருந்த இவரது பேட்டிங் சராசரி, தற்போது 19.4 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, இவரது ஸ்டிரைக் ரேட்டும் 195-இல் இருந்து 165 ஆகச் சரிந்துள்ளது.

இந்த இரட்டைச் சதத்தின் மூலம் மீண்டும் தன்னம்பிக்கையைப் பெற்றுள்ள அபிஷேக் சர்மா, இந்திய அணிக்காகவும் தனது பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.