இந்தியாவில் 25,00,000 பேர் வறுமையில் விழும் அபாயம் - ஐநா வளர்ச்சித் திட்டம் எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள், இந்தியப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
"மத்திய கிழக்கில் ராணுவ பதற்றம் அதிகரிப்பால் ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் ஏற்படும் மனித மேம்பாட்டு தாக்கங்கள்" என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. போர் மற்றும் ராணுவப் பதற்றத்தால் உலகளவில் சுமார் 88 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படலாம். இதில் தெற்காசிய நாடுகளே அதிகம் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக இந்தியாவில் 24.64 லட்சம் பேர் (சுமார் 25 லட்சம்) வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்ல வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் வறுமை விகிதம் 23.9 சதவீதத்தில் இருந்து 24.2 சதவீதமாக உயரும். வறுமையில் வாழ்பவர்களின் மொத்த எண்ணிக்கை 35.15 கோடியில் இருந்து 35.40 கோடியாக அதிகரிக்கக்கூடும்.

எரிபொருள் மற்றும் விலை உயர்வு: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்தால், அது சரக்கு போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி, சாமானிய மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கும்.
இந்தியாவின் உர இறக்குமதியில் 45 சதவீதம் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தே வருகிறது. இது ஜூன் மாதம் தொடங்கும் காரிப் பருவ விவசாயத்தைப் பாதிக்கக்கூடும். வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அங்கிருந்து வரும் வெளிநாட்டுப் பணவரவு பாதிக்கப்படுவது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைச் சிதைக்கும்.

பொருளாதார இழப்புகளைத் தாண்டி, இந்தியாவின் மனித மேம்பாட்டுக் குறியீடு வளர்ச்சியில் சுமார் 0.03 முதல் 0.12 ஆண்டுகள் வரை பின்னடைவு ஏற்படலாம் என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது. போர்க் காலம் நீடித்தால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்குச் சுமார் $299 பில்லியன் வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
