ரயில்வேயின் 'ஒரே செயலி' திட்டம் வெற்றி - 2.57 கோடி பேர் 'ரெயில் ஒன்' செயலியைப் பதிவிறக்கம்!

 
ரெயில் ஒன் ரயில் ரெயில் ஒன் ரயில்

இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த சேவையான 'ரெயில் ஒன்' செயலி, குறுகிய காலத்தில் 2.57 கோடி பயணிகளால் பதிவிறக்கம் செய்யப்பட்டு மிகப்பெரிய டிஜிட்டல் மைல்கல்லை எட்டியுள்ளது. 

பயணிகளுக்கு எளிமையான மற்றும் வேகமான சேவைகளை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ரெயில் ஒன்' செயலி, தற்போது இந்திய ரயில்வேயின் முதன்மையான டிஜிட்டல் தளமாக உருவெடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை 2 கோடிப் பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், மார்ச் 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான குறுகிய 15 நாட்களில் மட்டும் 57 லட்சம் பேர் புதிதாகப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் தற்போது மொத்தம் 2.57 கோடிப் பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில் டிக்கெட்

ஒருங்கிணைந்த சேவை: இதற்கு முன் தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC - முன்பதிவு) மற்றும் யூ.டி.எஸ் (UTS - முன்பதிவில்லா பயணச்சீட்டு) ஆகிய சேவைகள் தற்போது ஒரே செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ஒருமுறை உள்நுழைவதன்மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல், பி.என்.ஆர் (PNR) நிலை அறிதல் மற்றும் நடைமேடை பயணச்சீட்டு   பெறுதல் போன்ற அனைத்துச் சேவைகளையும் பெற முடியும்.

ரயில்வே நிர்வாகம் கடந்த மார்ச் 1, 2026 முதல் பழைய யூ.டி.எஸ் செயலியை முழுமையாக நிறுத்திவிட்டு, அதன் அனைத்துச் சேவைகளையும் 'ரெயில் ஒன்' செயலிக்குள் கொண்டு வந்துள்ளது. பயணிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவே, தற்போது பதிவிறக்கங்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

ரயில் ஒன்

ரயில் பயணிகளுக்குத் தனித்தனி செயலிகளால் ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்த்து, விரைவான மற்றும் எளிதான பயண அனுபவத்தை வழங்குவதில் 'ரெயில் ஒன்' செயலி ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.