தமிழ்நாட்டில் 4 மாதங்களில் 2.63 லட்சம் நாய்க்கடி பாதிப்பு - 17 பேர் பலி!

 
தெருநாய் தெருநாய்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தெருநாய்களின் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. மாநில பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் நான்கு மாதங்களிலேயே மாநிலம் முழுவதும் சுமார் 2.63 லட்சம் (2,63,385) பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டு முழுமைக்கும் 34 பேர் பலியான நிலையில், இந்த ஆண்டு வெறும் 4 மாதங்களிலேயே அந்த எண்ணிக்கையில் பாதியை எட்டியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய் தெருநாய் வெறிநாய்

தமிழகத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாநிலத்திலேயே மிக அதிகமாகச் சேலம் மாவட்டத்தில் 15,371 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முழுமைக்கும் சேலம் தான் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சிராப்பள்ளி, சென்னை, திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நாய் கடியின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்திலேயே மிகக் குறைந்தபட்சமாக மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் 1,208 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் சுகாதாரத் துறை நடத்திய முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த 17 பேரில் பெரும்பாலானோர் நாய் கடித்தவுடன் உடனடியாகப் போதிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாததே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

பலர் நகக் கீறல் அல்லது சிறிய அளவிலான கடியைத் அலட்சியப்படுத்தியுள்ளனர். மேலும், நாய் கடித்த பிறகு போடப்படும் 'ஆண்டி ரேபிஸ்' தடுப்பூசியின் முழுமையான 4 டோஸ்களையும் போடாமல் பாதியிலேயே நிறுத்தியதும் மரணத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

தெருநாய் நாய்

ரேபிஸ் நோய் என்பது 100% குணப்படுத்த முடியாத, உயிருக்கு ஆபத்தான ஒன்று என்றாலும், முறையான முதலுதவி மூலம் அதை 100% தடுக்க முடியும் என அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர். நாய் கடித்த அல்லது கீறிய இடத்தை உடனடியாக ஓடும் குழாய் நீரில் சாதாரணக் குளியல் சோப்பைப் பயன்படுத்தி 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும். இது வைரஸின் வீரியத்தை ஆரம்பத்திலேயே பெருமளவு குறைக்கும்.

நாய் கடித்த சில மணி நேரங்களுக்குள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆழமான காயங்கள் உள்ளவர்களுக்கு 'இம்யூனோகுளோபுலின்' மருந்தும் செலுத்தப்பட வேண்டும்.

தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 'விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு' திட்டத்தையும், நாய் தடுப்பூசி முகாம்களையும் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.