2700 செல்போன் நம்பர்கள், 800 பேர் விசாரணை - விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? - எஸ்.பி.மதன் விளக்கம்!

 
தூத்துக்குடி எஸ்.பி.மதன் தூத்துக்குடி எஸ்.பி.மதன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், எவ்வித நேரடிச் சாட்சிகளும் இல்லாத சூழலில், காவல்துறை எவ்வாறு அறிவியல் பூர்வமாகச் செயல்பட்டு உண்மைக் குற்றவாளியைக் கண்டறிந்தது என்பது குறித்து மாவட்ட எஸ்.பி. மதன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் நேரடி ஆதாரங்கள் குறைவாக இருந்ததால், காவல்துறை நவீனத் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தியது. அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவர்களை ஆய்வு செய்து, சுமார் 2700 செல்போன் எண்களைத் தனிப்படையின் ஒரு பிரிவு தீவிரமாகத் தணிக்கை செய்தது. குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் கேமராக்கள் இல்லை. இருப்பினும், அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 98 சிசிடிவி பதிவுகளைப் போலீசார் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி

வேடநத்தம் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றப்பின்னணி கொண்ட 800 ஆண்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இதில் 461 சரித்திரப் பதிவேடு (History Sheeters) குற்றவாளிகளிடம் டிஜிட்டல் மற்றும் நேரடி முறைகளில் விசாரணை நடத்தப்பட்டது. "ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் நாங்கள் கைது செய்யவில்லை" என்று குறிப்பிட்ட எஸ்.பி. மதன், பின்வரும் விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாகத் தெரிவிக்கப்பட்டபடி, மாணவியின் நகங்களில் இருந்த தடையங்கள் மற்றும் ரத்த மாதிரிகள் மூலமே தர்ம முனீஸ்வரன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களுக்குத் தொடர்பில்லை: இந்த கொடூரக் கொலையில் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

வேடநத்தம் தூத்துக்குடி

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ சமூக வலைதளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். மீறிப் புகைப்படங்களைப் பகிர்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் எஸ்.பி. மதன் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வருகிறது. எனவே, மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு உச்சபட்சத் தண்டனை பெற்றுத் தரப்படும் என எஸ்.பி. மதன் உறுதியளித்துள்ளார்.