கர்ப்பிணி நீர்யானை ஆவேசமாகத் தாக்கியதில் 27 வயது இளம் பெண் மருத்துவர் பலி... சிகிச்சை அளித்த போது பெரும் சோகம்!

 
சிவமோகா சிவமோகா

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உள்ள தியாகவரெகொப்பா  புலி மற்றும் சிங்கம் சபாரி உயிரியல் பூங்காவில், நீர்யானை தாக்கி இளம் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான சமிக்ஷா ரெட்டி  , அங்குப் பயிற்சி கால்நடை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பூங்காவில் இருந்த ஒரு பெண் நீர்யானை சினையாக (கர்ப்பமாக) இருந்த நிலையில், அதன் உடல்நிலையைப் பரிசோதிக்க இன்று (மார்ச் 20, 2026) மருத்துவக் குழுவினர் சென்றனர்.

bengaluru (1)

நீர்யானைக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த நீர்யானை ஆவேசமடைந்து திடீரெனச் சமிக்ஷா ரெட்டியைத் தாக்கியது. நீர்யானையின் பலமான தாக்குதலில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலை மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு, உடனடியாக ஷிவமோகாவில் உள்ள மெக்கான்  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்ப காலத்தில் பெண் நீர்யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உயிரிழந்த சமிக்ஷா ரெட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஷிவமோகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு இளம் திறமையான மருத்துவர் தனது கடமையைச் செய்யும் போது வனவிலங்கு தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.