திமுக நிர்வாகியின் கடையில் ₹5.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீல் - 2,800 வேட்டி, சேலைகள் பறிமுதல்!

 
ஜவுளிக்கடை ஜவுளி புடவை சேலை ஜவுளிக்கடை ஜவுளி புடவை சேலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், திமுக நிர்வாகிக்குச் சொந்தமான ஜவுளிக்கடை கிடங்கில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2,800 வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை பறிமுதல்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமணி என்பவர், பள்ளிபாளையம் காந்திபுரம் பகுதியில் 'ஸ்ரீ டெக்ஸ்டைல்' என்ற ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்குத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகப் பெருமளவில் வேட்டி, சேலைகள் மற்றும் பட்டுப்புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி தங்கதுரை தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை மற்றும் அதன் கிடங்கில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, அங்குப் பண்டல் பண்டலாக வைக்கப்பட்டிருந்த ஜவுளிகளைக் கண்டறிந்த அதிகாரிகள், அவற்றுக்கான முறையான கொள்முதல் ரசீதுகள் மற்றும் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். சுமார் 2,800 வேட்டி மற்றும் சேலைகள் (இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ₹5.70 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது) எந்தவிதமான ரசீதும் இல்லாமல் இருந்துள்ளது. சோதனையின் போது அங்கிருந்த உரிமையாளரின் தந்தை முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாலும், உடனடி ஆவணங்கள் இல்லாததாலும் இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

இது குறித்து தகவல் அறிந்து இடத்திற்கு வந்த உரிமையாளர் தங்கமணி, திமுக நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "நாங்கள் தொழில் ரீதியாகவே ஜவுளி வியாபாரம் செய்து வருகிறோம். இந்த ஆர்டர்கள் 15 நாட்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டவை. இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை" என்று அவர்கள் விளக்கமளித்தனர். இருப்பினும், "புகார் வந்துள்ளதால் விதிமுறைப்படி பறிமுதல் செய்ய வேண்டியது அவசியம்; உரிய ஆவணங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் காட்டி விட்டுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்" என அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 2,800 ஜவுளிப் பொருட்களும் ஈச்சர் லாரி மூலம் பலத்த பாதுகாப்புடன் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, உரிய ரசீதுகளைச் சமர்ப்பிக்கும் வரை இந்தப் பொருட்கள் அரசுத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.