சத்தீஸ்கர் சிறையில் 285 கைதிகள் பலி - தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் கைதிகள் உயிரிழக்கும் விகிதம் அபாயகரமாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. சிறைகளில் நிலவும் மோசமான சூழலே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால், தொற்று நோய்கள் வேகமாகப் பரவுகின்றன. போதிய மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் மற்றும் அவசர கால மருத்துவக் கருவிகள் சிறைகளில் இல்லை. இட நெருக்கடி மற்றும் தனிமை காரணமாகக் கைதிகளிடையே மன அழுத்தம் அதிகரித்து, அது உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-ம் ஆண்டு அதிகப்படியாக 90 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 2025 - 2026 (ஜனவரி வரை) கடந்த ஓராண்டில் மட்டும் 66 கைதிகள் மரணமடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 285 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், "வாழ்வதற்கான உரிமை மற்றும் சுகாதாரத்திற்கான உரிமை ஆகிய அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் இது" எனக் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகச் சத்தீஸ்கர் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கர் சிறை விவகாரம் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் டெல்லி விபத்துகளும் விசாரணை வளையத்தில் உள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்து 16 பேர் பலியான சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த விவகாரமும் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
