ஹிஜாப் இன்றி பாடியதால் 29 வயதுப் பாடகிக்கு 74 கசையடி மற்றும் 2 ஆண்டுகள் தடை விதிப்பு - ஈரானில் மனித உரிமை மீறல்!
ஈரான் நாட்டில் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடான ஹிஜாப் அணியாமல் தேசப்பற்றுப் பாடல் பாடி வீடியோ வெளியிட்ட இளம் பெண் கலைஞர் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 74 கசையடிகளுடன் கூடிய கடுமையான தண்டனைகளை விதித்திருப்பது சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. அந்நாட்டின் கடுமையான இஸ்லாமியச் சட்ட விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த 29 வயதான பிரபல கலைஞர் பரஸ்தூ அஹ்மதி. இவர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில், ஹிஜாப் அணியாமல் தேசப்பற்றுப் பாடல் ஒன்றைப் பாடி, அதன் வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், ஈரானிய ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவு போலீசார் இதனைக் குற்றமாகக் கருதி அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த ஈரானின் 'கும்' மாகாண நீதிமன்றம், பொதுவெளியில் மதக் கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி அவருக்குக் கடுமையான தண்டனைகளைத் தீர்ப்பளித்துள்ளது.
பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு நீதிமன்றம் பொதுவெளியில் வைத்து அவருக்கு 74 கசையடிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலோ அல்லது சமூக வலைத்தள செயல்பாடுகளிலோ அவர் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தடை விதித்துள்ளது.

ஈரானில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் பெண்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், இந்தத் தீர்ப்பு பெண் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாக உள்ளதாகக் கூறி ஐநா மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பல்வேறு சர்வதேசச் சமூக அமைப்புகள் ஈரானிய அரசுக்குத் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
