80 வயது மூதாட்டியைப் பலாத்காரம் செய்து, தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற ஆசாமி!
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையே உலுக்கும் வகையிலான ஒரு அநாகரிகப் படுபயங்கரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத பகுதியில், சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் முகம் மற்றும் தலை முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதாக வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அசுர வேகத்தில் விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, அந்த மூதாட்டியின் முகம் நாய் கடித்துக் குதறியதால் சிதைந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை மற்றும் போலீசாரின் புலனாய்வில் அங்கு அரங்கேறியிருந்த கொடூரம் அம்பலமானது. அந்தப் பாவி, வயது முதிர்ந்தவர் என்றும் பாராமல் 80 வயது மூதாட்டியை மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர், தனது இந்த அநாகரிகக் குற்றம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்ற நோக்கில், அருகில் கிடந்த ஒரு பெரிய பாராங்கல்லைத் தூக்கி அந்த மூதாட்டியின் தலையில் போட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், கொலையாளி இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, தலைமறைவாக இருந்த அந்த மிருகத்தனமான ஆசாமியை கைது செய்துள்ளனர்.
