ரூ.7 கோடி மதிப்புள்ள 3 பழங்கால சிலைகள் பறிமுதல் - சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிரடி: 5 பேர் கைது!

 
பழங்கால சிலைகள் சிலை கடத்தல்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ₹7 கோடி மதிப்பிலான 3 பழங்கால உலோகச் சிலைகளைக் கடத்த முயன்ற 5 பேரைச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

விழுப்புரம் சரகச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவீந்திரனுக்குக் கிடைத்த நம்பகமான ரகசியத் தகவலின் பேரில், கடலூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை-36ல் உள்ள சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மேம்பாலம் அருகே தனிப்படைப் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பிளாஸ்டிக் பைகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 5 நபர்களை மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டனர்.

அவர்களிடம் இருந்து ₹7 கோடி மதிப்புள்ள பூதேவி சிலை: 56 செ.மீ உயரம் (19 கிலோ), திருஞானசம்பந்தர் சிலை: 37 செ.மீ உயரம் (10 கிலோ), சிவகாமி சுந்தரி சிலை: 55 செ.மீ உயரம் (12.40 கிலோ) என 3 தொன்மையான உலோகச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன: சிலைகளை வாங்குபவர்களைத் தேடும் முயற்சியில், உலோகத்தில் தங்கத்தின் தூய்மையை அறிவதற்காகச் சிலைகளின் சில பகுதிகளை வெட்டி அவர்கள் சேதப்படுத்தியது விசாரணையில் அம்பலமானது. கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் நபரிடம் சில ஒப்படைக்கக் காத்திருந்தபோது இவர்கள் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்ட ராஜலிங்கம் (38) - திருநாரையூர், முத்துராஜ் (40) - வடக்கு கொளக்குடி, ராஜவேல் (50) - திருச்சின்னபுரம், செந்தில்குமார் (49) - திருச்சின்னபுரம், சுரேஷ் (34) - வடலூர் ஆகிய 5 பேரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்: கைது செய்யப்பட்ட நபர்கள் எழும்பூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 14, 2026 வரை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட சிலைகள் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை மற்றும் இதன் பின்னணியில் உள்ள கடத்தல் வலையமைப்பைக் கண்டறிய வேலூர் சரக ஆய்வாளர் முனியம்மாள் புலன்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடத்தலை முறியடித்துச் சிலைகளை மீட்ட தனிப்படையினரைச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஏடிஜிபி கல்பனா நாயக், ஐஜி அனில் குமார் கிரி, எஸ்பி சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

மேலும், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் முழு குழுவையும் அதிகாரிகளையும் வெகுவாகப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.