ஓடைக்குள் பாய்ந்த கார்... நீரில் மூழ்கி 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஓடை நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓடை நீரில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியது.

இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினரும் காவல்துறையினரும் இணைந்து காருடன் நீரில் மூழ்கிய 8 பேரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
