3 நாள் தொடர் விடுமுறை... ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.400 கோடி மது விற்பனை! முந்தைய சாதனைகள் தவுடுபொடி!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடிமகன்கள் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மதுபாட்டில்களை வாங்கித் தள்ளியுள்ளனர். ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அதற்கு முன்னதாக ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்தத் தொடர் விடுமுறையைச் சமாளிக்க, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்துக் கொண்டு ஆளாளுக்கு ஸ்டாக் வாங்கி வைத்ததில், விற்பனை ஜெட் வேகத்தில் உயர்ந்து ரூ.400 கோடியைத் தொட்டது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான ரூ.320 கோடி விற்பனையை விட மிக அதிகமாகும். விடுமுறை நாட்களில் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, பலரும் மொத்தமாகப் பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றதே இந்த அதிரடி விற்பனைக்குக் காரணம் எனத் தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி, பல இடங்களில் சட்டவிரோத விற்பனைக்காகவும் மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 3 நாட்கள் விடுமுறை என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் இந்த முறை கல்லாவைக் கட்டிவிட்டாலும், தேர்தல் சமயத்தில் இவ்வளவு பெரிய அளவில் மது விற்பனை நடந்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
