திருப்பதியில் 3 நாட்கள் வசந்த உற்சவம்... மார்ச் 31ல் தங்க தேரோட்டம் - ஆர்ஜித சேவைகள் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாடும் விதமாக, வரும் மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் 'வசந்த உற்சவம்' நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்களும் திருமலையே விழாக்கோலம் பூண உள்ளது. விழாவின் மூன்று நாட்களிலும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசாமிக்கு 'ஸ்நாபன திருமஞ்சனம்' எனப்படும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் பால், தயிர், தேன், இளநீர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்படும்.

உற்சவத்தின் இரண்டாம் நாளான மார்ச் 31-ம் தேதி காலை 9 மணி அளவில், மலையப்பசாமி தனது தேவியருடன் தங்க தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மூன்றாம் நாளான ஏப்ரல் 1-ம் தேதி, மலையப்பசாமியுடன் ஸ்ரீராமபிரான் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் சிலைகளுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு உற்சவம் நிறைவடையும். இந்த மூன்று நாள் விழாவையொட்டி, கோவிலில் வழக்கமாக நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிவற்றிற்கு முன்பதிவு செய்திருந்த பக்தர்கள், தர்ம தரிசனத்தின் மூலம் சுவாமியைத் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசந்த உற்சவத்தை முன்னிட்டுத் திருமலையில் நிலவும் வெப்பத்தைத் தணிக்க ஆங்காங்கே நிழற்பந்தல்கள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலம் தொடங்குவதால் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கக் கூடுதல் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
