லாரி மீது கார் மோதி விபத்து - சென்னையைச் சேர்ந்த 3 என்ஜினீயர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை கார் மற்றும் கனரக லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 3 தனியார் நிறுவன என்ஜினீயர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை பெரம்பூர் அருகே உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் சங்கர் (37). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருடன் அரியலூர் மாவட்டம் அரிசானத்தம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (30) மற்றும் சன்னாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சக்தி (21) ஆகியோரும் அதே நிறுவனத்தில் என்ஜினீயர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் மூவரும் நிறுவனத்தின் முக்கிய வேலை காரணமாகக் கேரளா மாநிலத்திற்குச் சென்றிருந்தனர். அங்கு தங்களது பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு காரில் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது விஜய் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் அவர்களது சொந்த ஊரான அரியலூரில் இறக்கிவிட்டு, அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டு மூவரும் கேரளாவில் இருந்து அரியலூர் நோக்கி காரில் புறப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில், டி.களத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாகச் சென்னையில் இருந்து துறையூர் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த ஒரு கனரக லாரியும், இவர்களது காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அந்த லாரியைத் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜலீல் பாஷா ஷேக் என்ற டிரைவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய என்ஜினீயர்கள் சங்கர், விஜய் மற்றும் சக்தி ஆகிய 3 பேரும் கடுமையான காயமடைந்து, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

விபத்து குறித்துப் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காரின் இடிபாடுகளை அகற்றி 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்தின் காரணமாகத் துறையூர் நெடுஞ்சாலைப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனடியாகப் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
