பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழப்பு; பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து அரசு நடவடிக்கை!
மராட்டிய மாநிலத்தில் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து 3 பழங்குடியின மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமத்தை அம்மாநில அரசு நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம் ஜப்தலை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பழங்குடியின உறைவிடப் பள்ளியின் விடுதியில், மாணவ மாணவியர் தங்கிப் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மாணவிகள் விடுதி அறையின் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென அறைக்குள் புகுந்த விஷப் பாம்பு அங்கிருந்த 6 மாணவிகளைக் கடித்துள்ளது. இதில் விஷமுறிவு ஏற்பட்ட 8, 12 மற்றும் 14 வயதுடைய 3 பழங்குடியின மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விடுதி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நேரிட்ட இந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த அரசு உதவிபெறும் பள்ளியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, மராட்டிய மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பழங்குடியின உறைவிடப் பள்ளிகளிலும் உடனடியாகப் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
