மொரினாவில் கார் மோதி 3 பேர் பலி - தப்பியோடிய ஓட்டுநருக்கு வலைவீச்சு!

 
விபத்து மரணம் கொலை  தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நேர்ந்த பயங்கர சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த முதியவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்ற கார் ஓட்டுநரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மொரினா மாவட்டம் அம்பா பகுதிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையோரம், பல்னா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

விபத்து

இந்த விபத்தின் தாக்கத்தால் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்த கும்கர் சிங் (வயது 60) - பல்னா கிராமம், ரம்கட் (வயது 55) - பல்னா கிராமம், ராஜ்வந்த் (வயது 55) - பல்னா கிராமம் ஆகிய 3 பேரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்:

விபத்து நடந்த உடனே காரை நிறுத்தாமல், ஓட்டுநர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று தப்பியோடிவிட்டார். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பா பகுதி காவல் துறையினர், உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரின் எண்ணைக் கண்டறிய அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புத் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பல்னா கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.