ஆந்திராவில் கோர விபத்து - 3 பேர் பலி; 4 பேர் படுகாயம்!
ஆந்திர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், அமராவதி, விஜயவாடா - ராஜமகேந்திரவரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலை தடுப்பைத் தாண்டி மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் தேவரப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட எர்னாகுடெம் பகுதி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விஜயவாடாவிலிருந்து ராஜமகேந்திரவரம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையின் நடுவே இருந்த டிவைடரின் மீது மோதி, அப்படியே எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய இரு கார்களிலும் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
