பெரியபாளையம் கோயில் அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 
ஆட்டோ

சென்னையை அடுத்த கொடுங்கையூரில் இருந்து ஒரே ஆட்டோவில் பெரியபாளையம் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் சென்ற குடும்பத்தினர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநரின் மனைவி, மாமியார் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் (42), தனது மனைவி பூங்கொடி (39), 10 வயது மகள், மனைவியின் தாயார் ராதா (65) மற்றும் மைத்துனரின் மகன்கள் இருவர் என மொத்தம் 6 பேர் கடந்த ஆகஸ்ட் 29 அன்று இரவு ஒரே ஆட்டோவில் பெரியபாளையம் கோயிலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த ஆட்டோ பனபாக்கம் அருகே உள்ள எம்.டி.சி பேருந்து நிறுத்தம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் மைத்துனரின் மகன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த மற்ற மூவருக்குத் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரியபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் வழிபாட்டிற்காகச் சென்ற குடும்பத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.