குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 3 பேர் பலி.... கையாலாகாத திமுக அரசு... அண்ணாமலை கண்டனம்!
தமிழகத்தில் திருச்சி மாநகராட்சி உறையூரில், மாநகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 4 வயது பெண் குழந்தை உட்பட 3 உயிர்கள் பலியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திருச்சி மாநகராட்சி உறையூரில், மாநகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், 4 வயது பெண் குழந்தை உட்பட 3 உயிர்கள் பலியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசின் போக்கு இப்போதும் தொடர்ந்து வருகிறது. சென்னை பல்லாவரத்திலும், இது போலவே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 3 உயிர்கள் பறிபோயின. அப்போதும் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை திமுக அரசு கூறிவிட்டது. அதற்கான பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்டது. பொதுமக்கள் உயிர் என்ன உங்களுக்கு அத்தனை மலிவாகி விட்டதா? பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் திமுக அரசு, பொய்களைக் கூறி சமாளிப்பதை விட்டுவிட்டு, உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
