டிசைன் டிசைனா கதை உருட்டி லட்சக்கணக்கில் மோசடி.. எக்ஸ் விசிக பெண் நிர்வாகி உட்பட 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

 
சேலம் விசிக பெண் நிர்வாகி

அரசு வேலை, கடனுதவி வாங்கித் தருவதாக மோசடி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள்பெண் நிர்வாகி உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம் பச்சப்பட்டியைச் சேர்ந்தவர் காயத்ரி(43). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இவர், சேலம் மாவட்ட சமூக நலத் துறையில் உயர்அதிகாரியாகப் பணியாற்றுவதாவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக ரூ.5 லட்சம் மானியக் கடனுதவி பெற்றுத் தருவதாகவும் கூறிஉள்ளார்.

இதை நம்பிய 26 பெண்களிடம், தனது கார் ஓட்டுநர்கள் அசோக்குமார் (37), ராஜசேகர் (39) ஆகியோர் மூலமாக மொத்தம் ரூ.24 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட காயத்ரி, பணத்தை திருப்பிக் கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் துறைக்குப் புகார்கள் வந்தன. இதேபோல, அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரும் பணத்தை திருப்பிக் கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, காயத்ரி, அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதேபோல, கார் மற்றும் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, சின்னனூர் மதியழகனிடம் ரூ.13 லட்சம், கோர்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.21 லட்சம், ஆத்தூர் காளீஸ்வரனிடம் ரூ.9.70 லட்சம், அழகாபுரம் விஜயாவிடம் ரூ.5.30 லட்சம் மோசடி செய்து, மிரட்டல் விடுத்ததாக காயத்ரி மீது 5 வழக்குகள், அவருக்கு துணையாக செயல்பட்ட அசோக்குமார், ராஜசேகர் மீதுதலா 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, தொடர் மோசடியில் ஈடுபட்ட மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடமும் வழங்கப்பட்டன. ஏற்கெனவே 2016-ல் மோசடி தொடர்பாக காயத்ரி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web