வெனிசுலா எல்லையில் பதற்றம்: கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி!

 
வெனிசுலா கொலம்பியா

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் பயங்கரவாத குழுக்கள், கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் போன்ற பல்வேறு சட்டவிரோதக் கும்பல்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கும்பல்கள் அவ்வப்போது பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணம் ஒகானா நகரில், வெனிசுலா எல்லைப்பகுதியில் செயல்பட்டு வரும் ராணுவ முகாம் மீது 'தேசிய விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சியாளர் குழுவினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கிளர்ச்சியாளர்கள் நவீன டிரோன்களைப் பயன்படுத்தி நடத்திய இந்தத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கொலம்பியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதிய ஜனாதிபதியாக அல்பர்டோ டி லா எஸ்பிரிலா பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் அரசிடம் கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.