தொடர் விடுமுறை... 3 மடங்கு எகிறியது விமான கட்டணங்கள்!
நாளை ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், வார இறுதி சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாகவும், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணமாகவும் தென் தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் திடீரென வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிப்பதற்கான கட்டணங்கள் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பொதுவாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமல்லாமல் சமீப காலங்களாக 2, 3 நாட்கள் தொடர் விடுமுறை தினங்கள் இருந்தாலே சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர் நோக்கி பலரும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிகள்வில் பயணிகள் செல்வதால் விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, கோவை செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருக்கிறது. சென்னை – தூத்துக்குடிக்கு வழக்கமான நாட்களில் ரூ.4,301ஆக இருந்த விமான கட்டணம் இன்றும் நாளையும் ரூ.10,796ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று மதுரைக்கு ரூ.4,063ஆக இருந்த விமான கட்டணம் ரூ.11,716 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை திருச்சி கட்டணம் ரூ.7,192 ஆகவும், சென்னை கோவை விமான கட்டணம் ரூ.5,349 ஆகவும் உயர்ந்துள்ளது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க விமான கட்டணங்கள் மேலும் அதிகரித்து வருவதாக பயணிகள் புலம்பி வருகின்றனர்
