குதிரை பேர புகாரால் தமிழகத்தில் 3 ஆண்டுகள் ஜனாதிபதி ஆட்சியா? டெல்லியின் கட்டுப்பாட்டில் போகிறதா தமிழ்நாடு?!

 
விஜய் ஆளுநர் விஜய் ஆளுநர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடைவதால், அதற்குள் புதிய அரசு அமைய வேண்டிய கட்டாயம் உள்ளது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் தவெக-வின் பலம் 117-ஆக உயர்ந்துள்ள போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட முடியாமல் விஜய் தவித்து வருகிறார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி குதிரை பேரம் நடப்பதாக எழுந்துள்ள புகார்கள், தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சி அமைய வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்யசபா விஜய்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரே எம்எல்ஏ-வான எஸ். காமராஜ், தவெக-வுக்கு ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் கடிதம் போலியானது என டிடிவி தினகரன் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காமராஜ் கடத்தப்பட்டதாகவும், தவெக தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆளுநர் மாளிகை வரை எதிரொலித்துள்ளன.

இதற்குப் பதிலடியாக காமராஜ் மகிழ்ச்சியுடன் கையெழுத்திடும் வீடியோவைத் தவெக வெளியிட்டாலும், காமராஜ் நேரில் தோன்றி தான் அதிமுக-வை ஆதரிப்பதாகக் கூறியது நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக ஆளுநர் கருதினால், அரசியல் சாசனப்படி ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

விஜய்

தற்போதுள்ள சூழலில் அடுத்த 48 மணிநேரத்திற்குள் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், ஆளுநர் அர்லேகர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு ஜனாதிபதி ஆட்சி அமலானால், தமிழகம் நேரடியாக டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். இந்த ஆட்சியை 6 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்து, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை தேர்தலே நடத்தாமல் வைத்திருக்க முடியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையுமா அல்லது டெல்லியின் நேரடி ஆட்சி தமிழகத்தில் காலூன்றுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.