300 புதிய பஸ்கள்... இன்று முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்!

 
முதல்வர் விஜய்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. (CNG) பஸ்களை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மொத்தம் 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் நீண்ட தூரப் பயணங்களுக்கான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்து, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பக்கோணம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி ஆகிய 7 மண்டலப் போக்குவரத்துக் கழகங்களின் பழைய பஸ்களுக்கு மாற்றாகவும், கூடுதல் தேவைகளுக்காகவும் இந்தப் புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22-ஆம் தேதியே இந்தப் புதிய பஸ்களின் இயக்கம் தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகப் பல்வேறு மாவட்டங்களின் பணிமனைகளில் இருந்து புதிய பஸ்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட முக்கியப் பேருந்து நிலைய வளாகங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சில நிர்வாகக் காரணங்களால் தள்ளிப்போன இந்தத் தொடக்க விழா, இன்று காலை 10 மணியளவில் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பிரதான முகப்பில் நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் பஸ்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததும், அந்தந்த கோட்டங்களுக்கான புதிய பஸ்கள் உடனே பொதுமக்கள் பயன்பாட்டிற்காகச் சாலைகளில் இயக்கப்படவுள்ளன.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் சி.என்.ஜி. மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய டீசல் பஸ்கள் ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு வருவது தமிழகப் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.