4 நாட்களில் 33 லட்சம் ஃபாலோயர்கள்... வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'

 
கரப்பான் பூச்சி கரப்பான் பூச்சி

சமூக ஊடக இளைஞர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் "கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்" என்று விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இணையத்தில் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'  வெறும் 4 நாட்களில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களைப் பெற்று மிகப்பெரிய சமூக வலைதள புரட்சியாக உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் தற்போதைய தலைமுறை இளைஞர்களை "கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்" என்று காரசாரமாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. நீதிபதியின் இந்த ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்திற்கு எதிரான ஒப்பிடல், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நீதிபதியின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும் அபிஜீத் திப்கே என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற வினோதமான இயக்கத்தைத் தொடங்கினார்.

மகனுக்கு 18 வயதாகும் வரை தந்தை தான் பொறுப்பு: உச்சநீதிமன்றம்..!!

டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில், இந்த பக்கம் தொடங்கப்பட்ட வெறும் 4 நாட்களில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களைப் பெற்று இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வினோதக் கட்சியில் தங்களை அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாகவும் பதிவு செய்துள்ளனர்.

இளைஞர்களின் இந்த சமூக வலைதளப் போராட்டம் இத்துடன் நின்றுவிடவில்லை. 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'-க்கு போட்டியாக, தற்போது 'தேசிய ஒட்டுண்ணி முன்னணி' என்ற பெயரில் மற்றொரு எதிர்க்கட்சி தளமும் நெட்டிசன்களால் தொடங்கப்பட்டுள்ளது.

நீதிபதி பயன்படுத்திய இரண்டு வார்த்தைகளையும் வைத்தே, டிஜிட்டல் மீம்கள் மற்றும் நையாண்டிகள் மூலம் இளைஞர்கள் நடத்தி வரும் இந்த வினோத அரசியல் போராட்டம் தற்போது உலகளவில் டிரெண்டாகி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் விமர்சனங்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து டிஜிட்டல் முறையில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு புதிய உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.