ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தடுப்புச் சுவரில் மோதிய அரசு பேருந்து - 35 பயணிகள் உயிர் தப்பினர்!
சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலைத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் அனைவரும் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து 35 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ்ராஜூ என்பவரின் தலைமையில் திருப்பத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வேலூரை அடுத்த செதுவாலை பகுதி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இருக்கையிலேயே சரிந்துள்ளார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறினர். இருப்பினும், சாலையின் நடுவே இருந்த இரும்புத் தடுப்பு மீடியன் மீது மோதி பேருந்து நின்றதாலும், அப்போது பின்னால் மற்றும் எதிரே இதர வாகனங்கள் வராததாலும் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் அனைவரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். வலிப்பால் துடித்த ஓட்டுநர் வெங்கடேஷ்ராஜூ உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும், கிரேன் உதவியுடன் பழுதான பேருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் வேறு ஒரு அரசுப் பேருந்து மூலம் பாதுகாப்பாகத் திருப்பத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
