கும்பகோணத்தில் இருந்து நேபாள் சென்ற 36 பேர் மாயம்... சுற்றுலா சென்ற போது விபரீதம்!
நேபாளத்தில் வரலாறு காணாத அளவில் பெய்துவரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் அம்மாநிலத்தை உலுக்கி வரும் நிலையில், தமிழகத்தின் கும்பகோணத்தில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற 57 பேரில் 36 பேரைத் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து ஆன்மிகத் தலங்களைத் தரிசிப்பதற்காக மொத்தம் 57 பேர் கொண்ட குழுவினர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களை முகமது உசேன் என்பவருக்குச் சொந்தமான டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த 36 பேரின் தற்போதைய நிலை குறித்த எந்தவிதத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்தச் சுற்றுலாவில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் என்பவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற ஏஜென்சி உரிமையாளரைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பேரிடர் பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பொருட்டு உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
