வெளிநாடுகளில் 37,740 இந்தியத் தொழிலாளர்கள் பலி - கடந்த 5 ஆண்டுகளில் நேர்ந்த சோகம்! வளைகுடா நாடுகளில் 86% உயிரிழப்புகள்!

 
நாடாளுமன்றம் நாடாளுமன்றம்

பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் விபரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்துள்ள தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது:

2021-ல் 8,234 பேர் (அதிகபட்ச உயிரிழப்பு). 2022-ல் 6,614 ஆகக் குறைந்தது, 2023-ல்: 7,291 பேர், 2024-ல்: 7,747 பேர், 2025-ல்: 7,854 பேர் என உயிரிழப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

புலம் பெயர் தொழிலாளர்கள்

மொத்த உயிரிழப்புகளில் 86 சதவீதத்திற்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளிலேயே நிகழ்ந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 12,380 பேர் உயிரிழந்து முதலிடத்தில் உள்ளது. சவூதி அரேபியாவில் 11,757 உயிரிழப்புகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. குவைத் (3,890), ஓமன் (2,821), மலேசியா (1,915) மற்றும் கத்தார் (1,760) ஆகிய நாடுகளிலும் கணிசமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு இந்தியக் குடிமக்களிடம் இருந்து சுமார் 80,985 புகார்கள் வந்துள்ளன. ஊதியப் பிரச்சினை, பணிச் சூழல் மற்றும் இதர தொழிலாளர் நலன் சார்ந்த புகார்களில் ஐக்கிய அரபு அமீரகம் (16,965 புகார்கள்) முதலிடத்தில் உள்ளது. மலேசியாவில் 8,333 புகார்களும், மாலத்தீவில் 2,981 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுரங்க தொழிலாளர்கள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் (மலேசியா போன்றவை) புகார்கள் அதிக அளவில் பதிவான போதிலும், அங்கு இந்தியத் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் வளைகுடா நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மரணங்களுக்கான துல்லியமான காரணங்கள் (விபத்து, உடல்நலக் குறைவு அல்லது தற்கொலை) குறித்து அமைச்சகத்தின் பதிலில் விரிவான விபரங்கள் வழங்கப்படவில்லை.