தமிழகத்தில் 38,00,000 பேர் பயனடைவர்.. முதியவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சைக்கான அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 70 வயது நிரம்பிய அனைத்து முதியவர்களுக்கும் வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 38 லட்சம் முதியவர்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அதில் இடம்பெறாத ஏனைய அனைத்து முதியவர்களும் எவ்வித வருமான வரம்புமின்றி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவர்.

தகுதியுள்ள முதியவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், அரசு மருத்துவக் காப்பீடு பதிவு செய்வதற்கான பிற பிரத்யேக மையங்கள் மூலமாகவும் இத்திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் புதிதாக இணையும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்காக, நபர் ஒருவருக்கு ரூ.849 என்ற வீதத்தில் காப்பீட்டுத் தவணைத் தொகையை அரசே ‘யுனைடெட் இந்தியா’ காப்பீட்டு நிறுவனத்திற்குச் செலுத்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து உயர்தர மருத்துவச் சேவைகளும் மற்றும் அறுவை சிகிச்சைகளும் இந்த முதியோர் காப்பீட்டுத் திட்டத்திலும் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
