திருப்பதியில் 3 நாட்கள் ராமநவமி உற்சவம் - அனுமன் வாகனத்தில் ராமர் உலா!
ஸ்ரீராம நவமி திருநாளை முன்னிட்டு, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 29ம் தேதி வரை மூன்று நாட்களுக்குச் சிறப்புத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இது குறித்த விரிவான கால அட்டவணையைத் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
முதல் நாளான இன்று மார்ச் 27ம் தேதி காலை மூலவர்களான சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு ராமநவமி ஆஸ்தானம் நடைபெறவுள்ளது. இரவு 7 மணிக்கு உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இரண்டாம் நாளான நாளை மார்ச் 28ம் தேதி காலை சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமருக்குச் சிறப்பு அபிஷேகம். காலை 9 - 10 மணிக்கு மிகவும் விசேஷமான முத்துமாலை ஊர்வலம் நடைபெறுகிறது. யானை மீது முத்துமாலையை வைத்து மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படும். மாலை 6 - இரவு 9 மணி பக்தர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
மூன்றாம் நாளான நாளை மறுதினம் மார்ச் 29ம் தேதி காலை 8:00 மணி: திருப்பதியில் உள்ள புனித நரசிம்ம தீர்த்தத்தில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு வரப்படும். மதியம்: அந்தப் புனித நீரால் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு 'சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம்' செய்யப்படும். இரவு 7:00 - 8:30 மணி: விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீராமர் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து உற்சவர்கள் தங்கத் திருச்சி வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.

இந்த மூன்று நாட்களும் திருப்பதி நகரம் ராம நாம கோஷத்தால் அதிரும் வகையில் விரிவான பாதுகாப்பு மற்றும் தரிசன ஏற்பாடுகளைத் தேவஸ்தானம் செய்துள்ளது.
