சாதிப் பெயரைச் சொல்லி தாக்கிய 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கிய புகார்களின் அடிப்படையில் 3 சிறுவர்கள் உட்பட நான்கு பேரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
கயத்தாறு அருகே சண்முகராஜ் (20) என்ற இளைஞரை, 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகப் பேசித் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி விக்னேஷ் (26) என்பவரைக் கல்லால் தாக்கி, சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசியதாகக் புகார் எழுந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி போலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட அஜித் (எ) சூர்யா (30) என்பவரைக் கைது செய்தனர். இச்சம்பவங்களில் காயமடைந்த சண்முகராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
