மாணவியை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்துக் கொன்ற கும்பல் - 4 பேர் கைது!
சென்னை திருவொற்றியூரில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட விவகாரத்தில், தம்பிக்குப் பதிலாக அவரது அண்ணனைக் கட்டையால் அடித்துக் கொன்ற நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்த சுனில் (22) என்பவரும் அவரது தோழியும் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அண்ணாமலை ரயில்வே கேட் வழியாகச் சென்றபோது, அங்கே நின்றுக் கொண்டிருந்த கும்பல் ஒன்று மாணவியை கிண்டல் செய்துள்ளது. இதனை சுனில் தட்டிக் கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் அக்கம் பக்கத்தினரால் சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு மது அருந்திவிட்டு வந்த அதே கும்பல், நள்ளிரவில் அந்த வழியாகச் சென்ற சுனிலின் அண்ணன் முனீஸ்வரனை (34) வழிமறித்துச் சுனில் எங்கே என்று கேட்டுள்ளது. அவரிடம் முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கட்டையால் முனீஸ்வரனைச் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியது.

தலையில் பலத்த காயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முனீஸ்வரன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாத்தாங்காடு காவல்துறையினர், எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் (21), ஜான்சன் (19), ஜெயந்தன் (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். முனீஸ்வரன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
