திண்டுக்கல் விபத்தில் 4 சிறுவர்கள் பலி; முதல்வர் விஜய் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 
முதல்வர் விஜய்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாகனம் மோதிய விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி-புத்தூர் சாலையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக மகேந்திரா தோஸ்த் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட யோகவர்ஷினி (11), அனன்யா (6), தனுஸ்ரீ (7), மற்றும் போஸ்கிரண் (6) ஆகிய நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாள் என்பவருக்கு உயர்தரச் சிறப்பு சிகிச்சை அளித்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவருக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.