செல்ஃபி எடுத்தபோது ராட்சத அலையில் சிக்கி நண்பர்கள் 4 பேர் பலி!
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் கடற்கரைப் பகுதியில் தசரா பண்டிகை விடுமுறையைக் கொண்டாடச் சென்ற மாணவ-மாணவிகள் 4 பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோத்த-ரோட்டில் உள்ள சந்தைப்படுத்துதல் பயிற்சி மையத்தில் 125 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். தசரா விடுமுறையை ஒட்டி பெரும்பாலோர் ஊருக்குச் சென்ற நிலையில், விடுதியில் தங்கியிருந்த 25 மாணவ-மாணவிகள் ஸ்ரீகாகுளம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள பெத்த கனகல்லவனிப்பேட்டை கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

நாகாவலி ஆறு கடலில் சங்கமிக்கும் இப்பகுதியில் சேறு அதிகமாக இருப்பதால், இது பாதுகாப்பு கருதித் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
விஜயநகர மாவட்டம் கெங்குவ கிராமத்தைச் சேர்ந்த மாதவி (19), கொல்லப்பள்ளி பவானி (19) மற்றும் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தைச் சேர்ந்த மர்ரி மஹி (18) ஆகிய மூவரும் அப்பகுதியில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சேற்றில் சிக்கிக் கொண்ட நிலையில், திடீரென வந்த ராட்சத அலை மூவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவரான விக்ரம், அவர்களை மீட்க முயன்றார். துரதிர்ஷ்டவசமாக அவரும் ராட்சத அலையில் சிக்கிக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி மர்ரி மஹி, பவானி ஆகியோரின் உடல்களை மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, குண்டு வாணி பேட்டை கடற்கரை பகுதியில் விக்ரம் மற்றும் மாதவி ஆகியோரின் உடல்களும் சடலங்களாக மீட்கப்பட்டன. இப்பகுதியில் மாணவர்கள் கடலில் இறங்கி செல்பி எடுக்க முயன்றபோது நேர்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
