பாலத்தின் மீது நின்று சந்தோஷமாக செல்ஃபி எடுத்த நண்பர்கள் 4 பேர் லாரி மோதி பலி!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே மேம்பாலத்தில் காரை நிறுத்திவிட்டுச் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் அடுத்த சிவ்புரி பகுதியைச் சேர்ந்த 7 நண்பர்கள், தாங்கள் பயணித்த காரில் மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாகச் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று காலை அவர்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள ரூபாபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்குள்ள மேம்பாலத்தில் தங்களது காரை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் காரின் முன்பாக நின்றுகொண்டு 7 பேரும் தங்களது செல்போன்களில் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்துள்ளனர்.
அந்தச் சமயத்தில் அவ்வ வழியாக வந்த ஒரு அதிவேக லாரி, எதிர்பாராதவிதமாக அவர்கள் நிறுத்தியிருந்த கார் மீது பயங்கரமாக மோதியதுடன், செல்பி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்திற்குள்ளும் புகுந்தது. இந்த கோர விபத்தில் காரின் அடியில் சிக்கி 7 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த ரூபாபூர் காவல்துறையினர் மீட்பப் பணியில் ஈடுபட்டனர். அப்பளம் போல் நொறுங்கிய காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால், கியாஸ் கட்டர் மூலம் காரின் உதிரிபாகங்களை வெட்டி எடுத்து ஒவ்வொருவராக மீட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
