சேலத்தில் காணாமல் போன 4 அரசுப் பள்ளி மாணவர்கள் நாமக்கல்லில் பத்திரமாக மீட்பு!

 
அரசு பள்ளி சிறுவர்கள் மாணவர்கள்  மாயம்

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 4 அரசுப் பள்ளி மாணவர்கள் நேற்று வீட்டிலிருந்து திடீரெனக் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கம்போல வீட்டிலிருந்து புறப்பட்ட 4 சிறுவர்களும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் குடும்பத்தினரும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடியும் மாணவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பெற்றோர் உடனடியாக ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் உடனடியாகத் தனிப்படைகள் அமைத்துத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர்.

காவல் துறையினரின் தீவிர விசாரணையில், காணாமல் போன 4 மாணவர்களும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் கிடைத்த 2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் விரைந்து சென்று குமாரபாளையத்தில் இருந்த 4 சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டு ஓமலூருக்கு அழைத்து வந்தனர்.

சிறுமி

காவல்துறையின் அதிவேக நடவடிக்கையால் 4 பள்ளி மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுத் தங்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், சிறுமியைக் குறித்த எந்த துப்பும் கிடைக்காதது தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. நேற்று திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயமான நிலையில், போலீசார் அது குறித்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.