4 மணி நேர மரண பயம்... வானிலேயே வட்டமடித்த விமானம் ... பயணிகள் கதறல்... அதிர்ச்சி வீடியோ!
ஹைதராபாத்தில் இருந்து ஹூப்பள்ளிக்கு 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட 'பிளை 91' (Fly91) விமானம், மோசமான வானிலை காரணமாக நடுவானில் 4 மணி நேரம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை 3 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம், திட்டமிட்டபடி 4:30 மணிக்கு ஹூப்பள்ளியில் தரையிறங்க வேண்டியது. ஆனால், அங்கு நிலவிய சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக விமானத்தைத் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தார்வாட் மற்றும் சிவமோகா உள்ளிட்ட பகுதிகளுக்கு மேல் நீண்ட நேரமாக அந்த விமானம் வட்டமடித்துக் கொண்டே இருந்தது.
விமானம் தரையிறங்காமல் தொடர்ந்து வானிலேயே சுற்றியதால், உள்ளே இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்தனர். விமானத்தின் ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த மோசமான வானிலையைக் கண்டு, பயணிகள் சிலர் உயிருக்குப் பயந்து கண்ணீர் விட்டு அழுதபடி பிரார்த்தனை செய்தனர். இந்த பதற்றமான காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரைக் கலங்கச் செய்துள்ளது. தங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், 4 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் மரண பயத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர்.
இறுதியாக எரிபொருள் இருப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது. இரவு 7:30 மணியளவில் பெங்களூருவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பின்னரே, பயணிகளும் அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தொழில்நுட்பக் கோளாறு ஏதுமில்லை என்றும், மோசமான வானிலை காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
