ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தடைந்த 4 சிவிங்கிப்புலிகள் - ‘பன்னர்கட்டா’ பூங்காவில் 30 நாள் தனிமை!
தென்னாப்பிரிக்காவிலிருந்து விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 சிவிங்கிப்புலிகள் (2 ஆண், 2 பெண்), இன்று அதிகாலை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன.தென்னாப்பிரிக்காவின் 'இந்துனா பிரைமேட் மற்றும் பேரட் பார்க்'கிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தச் சிவிங்கிப்புலிகளை, கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் நேரில் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து அவை பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
சிவிங்கிப்புலிகள் புதிய சூழலுடன் ஒன்றிணைவதற்காக, அவை மறுவாழ்வு மையத்தில் உள்ள பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் வைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவற்றின் உடல்நலம் மற்றும் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர். புதிய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அவற்றுக்குச் சிறப்பு உணவு முறைகள் வழங்கப்பட உள்ளன.

30 நாட்களுக்குப் பிறகு, அவற்றின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காகப் பிரத்யேக கூண்டுகளுக்கு அவை மாற்றப்படும்.கர்நாடகாவில் ஒரு காலத்தில் 'சிவிங்கி' என அழைக்கப்பட்ட இந்த இனம் நீண்ட காலத்திற்கு முன்பே காடுகளில் இருந்து மறைந்து விட்டது. தற்போது உயிரியல் பூங்காக்கள் மூலம் மீண்டும் இந்த இனத்தைப் பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருகை பன்னர்கட்டா பூங்காவின் மரபணு பன்முகத்தன்மையை அதிகரிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
