ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணம்... மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை!
சித்தூர் மாவட்டம் பங்காரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தாமோதர் (32) என்ற தொழிலாளி, தனது மனைவி நிர்மலா(29 )மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவரது மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் கடும் மன உளைச்சலுக்குள்ளான தாமோதர், தனது திலீப் (13) என்ற மகனுக்கும், ஸ்ரீவித்யா (11) மகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார். அதன் பின்னர் தனது மனைவி நிர்மலாவுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தாமோதரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த சித்தூர் ஊரகப் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களது தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது அங்கிருந்து ஒரு தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் தங்களது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனத் தாமோதர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது இறுதிச் சடங்குகளுக்கான செலவிற்காகத் தனது வங்கி ஏடிஎம் அட்டைகளில் உள்ள பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
