நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைs சேர்ந்த 4 பேர் பலி.. சிலிகுரியில் பயங்கரம்!

 
நிலச்சரிவு நிலச்சரிவு

மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்குச் சுற்றுலா வந்த இடத்தில் பெய்த அசுர மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

அண்டை மாநிலமான சிக்கிமைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான சிலிகுரிக்கு காரில் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் எதிர்பாராத விதமாகக் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதற்கிடையே, சிலிகுரி மலைப்பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இவர்களது கார் சிக்கியுள்ளது. நிலச்சரிவின் கோரப் பிடியில் சிக்கிய கார், அருகில் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் பயங்கரமாக அடித்துச் செல்லப்பட்டது.

கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சுற்றுலா வந்த 4 பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக மாயமாகி இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ஆற்றுப் பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஆற்றங்கரையோரம் மாயமான 4 பேரின் உடல்களும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் ஒரு 5 வயதுக் குழந்தையும் அடங்குவர் என்பது பார்ப்போரின் நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது.

பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.