பாகிஸ்தானில் போலீசாரைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு - 4 காவலர்கள் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் நான்கு காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் சம்பவம் லக்கி மார்வாட் மாவட்டத்தில் உள்ள பன்னு-லக்கி சாலையில் நிகழ்ந்தது. அங்கு வழக்கமான போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸார் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பாளர் உட்பட 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். இதற்கடுத்த சில மணி நேரங்களில், பன்னு மாவட்டத்தின் மண்டன் பகுதியில் மற்றொரு தாக்குதல் நடந்தது. பலி: பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு காவல் கான்ஸ்டபிள், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கோரத் தாக்குதல்களைக் கைபர் பக்துவா மாகாண முதலமைச்சர் சோஹைல் அப்ரிடி வன்மையாகக் கண்டித்துள்ளார். உயிரிழந்த காவலர்களின் தியாகம் வீண் போகாது என்றும், இதற்குப் பின்னால் உள்ள 'தேச விரோத சக்திகள்' மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாரைக் குறிவைத்துத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
